அமெரிக்காவுடனான போர் பதற்றத்தில் புடினை நாடும் வெனிசுலா.. தீவிரமடையும் மோதல் நிலை!
புதிய இணைப்பு
அமெரிக்கா, வெனிசுலா மீது அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையில், வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இராணுவ உதவி கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அரசாங்கத்தின் உள் ஆவணங்களை மேற்கோள் காட்டும் தகவல்களின் படி, வெனிசுலாவின் பாதுகாப்பு ரேடார்களை நவீனமயமாக்குவதற்கும் இராணுவ உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கும் உதவி கோரி நிக்கோலஸ் மதுரோ விளாடிமிர் புடினுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஏவுகணை விநியோகத்திற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் வெனிசுலா, சீனா மற்றும் ஈரானிடமிருந்து இராணுவ ஆதரவையும் நாடியுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான மோதலை எதிர்கொள்ள விரிவாக்கப்பட்ட இராணுவ ஒத்துழைப்பை கேட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு மதுரோ ஒரு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

முதலாம் இணைப்பு
கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 62க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் 15க்கும் மேற்பட்ட கப்பல்களை அழித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் எந்த பொது ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் போர்பதற்றம்
இந்நிலையில், ட்ரென் டி அரகுவா போன்ற வெனிசுலா குற்றக் கும்பல்களை குறிவைத்து நடத்தப்படும் பரந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விவரிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் இந்த கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவற்றை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, வெனிசுலாவை தாக்குவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அறிவித்துள்ள போதிலும் இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் வெனிசுலா கடற்கரைக்கு அருகே ஒரு பெரிய அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கடுகின்றது.

இது அமெரிக்கா வெனிசுலா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல்களை மேற்கொள்ள தயாராக இருப்பதை காட்டுகின்றது.
அதேநேரம், வெனிசுலாவின் அரச தரப்பில் இருந்தும் தாங்கள் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை போர் பதற்றத்தை அதிகரிப்பதை காட்டுவசதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |