ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான ஈழத்தமிழர்கள் மீண்டும் வருவது ஆபத்தானது! இலங்கை அரசாங்கம் உத்தரவாதமளிக்கவில்லை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திரும்பாமல் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து நளினி உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடிய ஒரு விடயம்.
இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் வழங்கவில்லை
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை மதிக்கின்ற, சட்ட ஆட்சியை மதிக்கின்ற ஒரு அரசு அல்ல.யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழர்களை பொறுத்தவரை அது தான் எங்களுடைய அனுபவம்.
சம்பவமொன்றுக்கு சட்ட ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் எந்தவொரு தரப்பும் அதற்கு எதிராக நடந்துகொள்ளமுடியாது.
ஆனால், இலங்கை அரசு சட்டங்களை, ஜனநாயகத்தை மதிக்கின்ற அரசு அல்ல என்ற அடிப்படையில், ராஜிவ் காந்தி வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பாமல் பாதுகாக்கவேண்டியது அத்தியாவசியமாகும்.
இலங்கை அரசாங்கம் எந்த உத்தரவாதங்களையும் வழங்காமல் அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவது படு மோசமான செயலாகவே பார்க்கவேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
