நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை உயர்வு: நாமல் எம்.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(20.8.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கைக்கு மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
முறைப்பாடுகள்
அவர் மேலும் உரையாற்றுகையில், "16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை அதிகரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

எனினும், இது தொடர்பாக இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைக்காத சூழ்நிலை நிலவுகின்றது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மருந்துகளுக்கு தட்டுப்பாடு
அரச வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது எனக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு உடனடியாகத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.