ராஜபக்சக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி.. அதிரடி காட்டப் போகும் புலனாய்வு அதிகாரிகள்
ராஜபக்ச அரசாங்கங்களின் முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இம்மாதம் தீவிரப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
அத்துடன், புலனாய்வு நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடாது என்றும் சுட்டிக்காட்டியது.
இதேவேளை, கோட்டை நீதவானால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இரத்து செய்யுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்த மனுவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
பல கைதுகள்..
அது மாத்திரமன்றி, முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்டமை தொடர்பில் திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுஜீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிரான வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளன.

மற்றொருபுறம், எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் கிரிஷ் சொத்து மேம்பாட்டுத் திட்ட ஊழல் வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் இதுவரை நாடு திரும்பவில்லை.

இதனிடையே, கடந்த ஒகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு முறையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இழுபறியில் உள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக அறிக்கையை நவம்பர் 11 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்குக் உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருவதால், எதிர்வரும் வாரங்களில் மேலும் பல கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.