தென்னிலங்கை அரச மாபியாக்களின் களஞ்சியங்களை சோதனையிடுமாறு கோரிக்கை!
தென்னிலங்கை அரிசி மாபியாக்களின் களஞ்சியங்களை அரசு உடனடியாக சோதனையிட வேண்டும் என வவுனிய நெல் ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சி.விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று(25) வெளிக்குளத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது புதிய அரசாங்கமானது கூறியதை செய்யவில்லை என்பதை விட நிறைய நல்ல விடயங்களை செய்து வருகின்றது.
விவசாயம்
குறிப்பாக போதைப்பொருள் பாவனை அற்ற இளம் சமூகத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
இது முழுமையாக நடக்கும் பட்சத்தில் மூவின மக்களுக்கும் நல்லது நடக்கும் என எண்ணுகின்றோம். எமது நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் மட்டுமே காணப்படுகின்றது என புத்திஜீவிகள் உட்பட அனைவராலும் கூறினாலும் கூட விவசாயிகளை யாரும் ஒரு சதவீதமேனும் கருத்தில் கொள்வதாக தெரியவில்லை.

குறிப்பாக விவசாயிகள் மழையிலும், விச ஜந்துக்களின் மத்தியில் விவசாயத்தினை மேற்கொண்டு நெல்லினை சந்தைப்படுத்துகின்றனர்.
இவ்வாறு சந்தைப்படுத்தப்படும் போது அரலிய, நிபுன, சூர்யா, மகிந்த ரத்தின இவ்வாறான நிறைய தென்னிலங்கை முதலாளி வர்க்கமானது இலங்கையில் உள்ள நெற்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்கின்றனர்.
அரிசி தட்டுப்பாடு
இவ்வாறு கொள்வனவு செய்த நெல்லினை பதப்படுத்தி தங்களது களஞ்சியங்களில், களஞ்சியப்படுத்துவதோடு நெல் விளைவிக்க முடியாத கால கட்டத்தில் அரிசியாக்கி அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்கின்றனர்.

எனவே அரசானது ஒரு சில அரிசி மாபியாக்களின் களஞ்சியத்தை ஆராய்ந்து அவர்களின் இருப்பினை அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதோடு, அரிசியினை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிற்கும் சரியான பாடத்தினை கொடுக்கும் பட்சத்தில் இலங்கையில் அரிசித்தட்டுப்பாடு ஏற்படாது.
அரிசி தட்டுப்பாடு வருவதை இவ் அரசு கண்டும் காணாமல் இருப்பதை பார்க்கும் போது விவசாய மக்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
நாடு நன்றாக வர வேண்டும் என்றால் இந்த அரசானது விவசாயத்தினை மேற்கொள்வதற்கான போதியளவு கவனத்தினை செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |