சர்வதேச விசாரணை இல்லையேல் ராஜபக்சக்களின் கதியே ரணிலுக்கும்: எச்சரிக்கும் இரா.சம்பந்தன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும். இல்லையேல் கடந்த ஆட்சியில் இருந்த ராஜபக்சக்களுக்கு என்ன நடந்ததோ அதே நிலைமைதான் அவருக்கும் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை மீதான ஐ.நா. உரிமைகள் சபையின் தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரிக்க முடியாது.
மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு ஐ.நா. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதை அவர் மறக்கவும் கூடாது. எனவே, ஐ.நா. தீர்மானங்களின் பரிந்துரைகளை அவர் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.
சர்வதேச விசாரணை
இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் குறித்தும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு (ரி.சரவணராஜா) இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த நாட்டில் சர்வதேச விசாரணைகள் நடந்தால்தான் உண்மைகள் வெளிவரும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கும்.
சர்வதேச விசாரணையே இந்த நாட்டில் இன, மத நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். இல்லையேல் அனைவரும் சந்தேகங்களுடன் வாழ வேண்டிய நிலையே ஏற்படும்.
சர்வதேச விசாரணைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடமளிக்காவிடின் கடந்த ஆட்சியில் இருந்த ராஜபக்சகளுக்கு என்ன நடந்ததோ அதே நிலைமை தான் அவருக்கும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |