மானியங்களை விநியோகிக்க இந்தவாரம் முதல் QR குறியீடு முறை
தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியங்களை விநியோகிக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை(26) முதல் QR குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தொடக்கத் திட்டத்தில், 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டு தேயிலை அறுவடையை 400 மில்லியன் கிலோகிராமாக அதிகரிக்கும் நீண்டகால இலக்குடன், ரூ. 2,000 மில்லியன் மதிப்புள்ள உர மானியங்கள் ஒதுக்கப்படும்.
QR குறியீடு முறை
அமைச்சின் கூற்றுப்படி, நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 75% பங்களிக்கும் சிறுதோட்ட விவசாயிகளுக்கு இந்த மானியம் முதன்மையாக பயனளிக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் 50 கிலோ உரத்துக்கு ரூ. 4,000 மற்றும் 25 கிலோ உரத்துக்கு ரூ. 2,000 பெறுவார்கள். பயனாளிகளுக்கு ஒரு QR குறியீடு வழங்கப்படும், இதன் மூலம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உரத்தை கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் மூலம் பெற முடியும்.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெலிப்பென்னவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்தன தலைமையில் நடைபெற உள்ளது.



