ஓமான் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு எரிவாயு கொள்வனவு செய்ய முயற்சி!விசாரணை நடத்துமாறு உத்தரவு
தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எரிவாயு கொள்வனவு கேள்விப்பத்திரத்தை ரத்து செய்து, ஓமான் நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய முயற்சித்தமை குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.
கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையிலான குழு, இது தொடர்பில், கடந்த 5ஆம் திகதியன்று விசாரணையை நடத்தியது.
இதன்போது லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடெட், லிட்ரோ எரிவாயு டேர்மினல் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோப்பரேசன் ஆகியவற்றின் அதிகாரிகள் முன்னிலையாகியுள்ளனர்.
கோப் குழுவின் விசாரணை
சியாம் நிறுவனத்திடம் இருந்து எரிவாயு மெட்ரிக் டன் ஒன்றை 96 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட கேள்விப்பத்திரத்தை ரத்துச்செய்து, ஓமான் நிறுவனத்திடம் இருந்து 129 டொலர் கொள்வனவுக்கு அங்கீகாரம் பெறப்பட்டமை தொடர்பில், கணக்காய்வாளர் நாயகம் ஊடாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோப் குழு இந்த விசாரணையின் முடிவில் பரிந்துரைத்தது.
கடந்த பெப்ரவரி மாதத்துடன் எரிவாயு கொள்வனவுக்கான கேள்விப்பத்திரக் காலம் முடிவடைந்த நிலையில் 280,000 மெட்ரிக் டன் எரிவாயுவிற்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டன.அதன்படி மூன்று எரிவாயு வழங்குநர்கள் விலைமனுவை சமர்ப்பித்தனர்.
இதன்போது, சியாம் எரிவாயு நிறுவனம் ஒரு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்கள் என்ற மிகக் குறைந்த விலையை சமர்ப்பித்துள்ளதுடன் அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு விநியோக அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
எனினும் ஏல நடவடிக்கையின் போது அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி இலங்கையில் உள்ள வங்கிகள் நாணய கடிதங்களை சியாம் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க முடியாததால் அந்த நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவைப் பெற முடியவில்லை என்று லிட்ரோ அதிகாரிகள் விசாரணையின்போது குறிப்பிட்டனர்.
இதனையடுத்து தற்காலிக தீர்வாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு 129 அமெரிக்க டொலர்கள் என்ற விலையை அனுப்பிய ஓமானிய நிறுவனம், மாதம் ஒன்றுக்கு 25,000 மெட்ரிக் டன் வீதம் 4 மாதங்களுக்கு 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை வழங்க இணக்கம் வெளியிட்டதாக லிட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிவாயு கொள்வனவிற்கான கேள்விப்பத்திரம்
இந்நிலையில், சியாம் கொள்வனவு ரத்து செய்யப்பட்டு ஓமான் நிறுவனத்திடம் இருந்து 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததாக லிட்ரோ அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மொத்தமாக 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தக் கொள்வனவுக்காக பயன்படுத்தப்பட்டதாக லிட்ரோ லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கோப் குழுவின் முன்னால் இடம்பெற்ற விசாரணையின்போது தெரிவித்தார்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து, உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன்
அமெரிக்க டொலர் கடன் தொகை திறம்பட பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து முறையான
விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கோப் தலைவர் கணக்காய்வாளர்
திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.