எதுவுமே இல்லாத இலங்கை என்று பெயர் சூட்டக்கூடிய நிலையில் நாடு:கோவிந்தன் கருணாகரம்
"கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த காலத்தில் எடுத்த மடத்தனமான முடிவுகளால் நாடு மோசமடைந்து நாசமடைந்திருக்கின்றது.
எனவே, இந்நாட்டின் நிலையைக் கருத்தில்கொண்டு அவர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வலியுறுத்தினார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதுவுமே இல்லாத இலங்கை என்று பெயர் சூட்டல்
"தற்போதுள்ள சூழ்நிலை எல்லோருக்கும் தெரியும். இலங்கை என்பதற்குப் பதிலாக எதுவுமே இல்லாத இலங்கை என்று பெயர் சூட்டக்கூடிய நிலையில் நாடு இருக்கின்றது.
பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் எதுவுமே இல்லை. ஊரடங்குச் சட்டம் போன்று வீதிகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அதேபோல் 40 வருடங்களுக்கு முன்பு சைக்கிளைக் கண்டவர்கள் பழைய சைக்கிள்களைத் திருத்தி வீதிகளில் செல்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இதேவேளை, எமது மட்டக்களப்பு மாவட்டம் பற்றிச் சில விடயங்களைக் கூறலாம் என்று நினைக்கிறேன். உண்மையில் இலங்கையின் அரிசி உற்பத்தியில் முக்கியமாக வலுச்சேர்க்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது. பிரதான தொழிலாக விவசாயமும் மீன்பிடியும் இருக்கின்றது.
நாட்டின் நெருக்கடிக்கான காரணம்
எரிபொருள் இல்லாத காரணத்தால் மீன்பிடியும் இல்லாமல் இருக்கின்றது. அத்துடன் மீன்பிடிக்குச் செல்பவர்கள் நாளாந்த வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாமலிருக்கின்றனர்.
நாட்டுக்கு இந்த நிலைமையைக் கொண்டுவந்தவர் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜனாதிபதியாக வந்த காலத்தில் எடுத்த மடத்தனமான முடிவுகளால் நாடு இந்த நிலைக்குச் சென்றிருக்கின்றது.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களைப் பலியெடுத்தவர் இன்று நாட்டின் 22 மில்லியன் மக்களையும் ஒரே சவக்குழிக்குள் கொன்று குவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டு வந்திக்கின்றார்.
அந்த நிலைமையில் அவரை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவிகள் துரத்துகின்றன. இவ்வாரம் இந்தப் நாடாளுமன்றத்துக்கும் ஜனாதிபதி கோட்டபாய வந்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் வைத்து அவர் துரத்தப்பட்டிருக்கின்றார்.
அவருக்கு வாக்களித்த இந்த நாட்டின் 69 இலட்சம் மக்களுமே அவரைத்
துரத்துகிறார்கள். இந்த நாட்டின் நிலையைக் கருத்தில்கொண்டு அவர் பதவி விலக
வேண்டும்" - என்றார்.