பிளாஸ்டிக் உணவுப் பொதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை
புதுக்குடியிருப்பில் அனைத்து உணவகங்களிலும் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்து, இயற்கையான பொருட்களின் பாவணையை அறிமுகப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலானது நேற்றைய தினம்(07.08.2026) இடம்பெற்றுள்ளது.
இயற்கையான பொருட்களின் பாவணை
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பரிமாறல் முறைகளின் அவசியம் குறித்து உணவக உரிமையாளர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது, அடுத்த ஒரு மாத காலத்திற்குள் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு உணவக உரிமையாளர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பசுமையான புதுக்குடியிருப்பை உருவாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து இயற்கை நட்பு நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், வருமானப் பரிசோதகர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
