பைசர் தடுப்பூசியை பெற பொதுமக்கள் தாமதம் - வைத்திய அதிகாரி ஆதங்கம்
வடக்கிலுள்ள மக்கள் எங்களுக்கு பைசர் தடுப்பூசியே வேண்டும் அதனை பெற்றுத்தருமாறு கோரியவர்கள் இன்று மூன்றாவதாக செலுத்தப்படும் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் தாமதம் காட்டிவருகின்றார்கள்.
எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு முன்பதாக அனைவரும் மூன்றாவது தடுப்பூசியை கட்டாயம் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றையதினம் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக பெற்றோர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களுக்கு தடுப்பூசி பற்றிய போதிய விழிப்புணர்வுகள் ஏற்பட்டாலேயே நாங்கள் மாணவர்களுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்க முடியும் எமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியானது உலகத்தரம் வாய்ந்தவையாகவே காணப்படுகின்றன.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வதால் கொரோனா நோய் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முன்வரவேண்டும்.
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று தடுப்புசியை தற்போது இலங்கையில் ஏற்றிக்கொள்வதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது . 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டபோது ஓரிரு நாட்களுக்கு தலையிடி உடல் அசதிகள் தடுப்பூசி ஏற்றிய கை வலி என்பன ஏற்படும் . இது அனைத்து வகையான தடுப்பூசிகள் ஏற்றப்படும்போது ஏற்படும் சாதாரண வலிகளே தவிர வேறொன்றும் இல்லை.
தற்போதும் நாட்டில் கொரோனாவினால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன . இறப்புக்களும் இடம்பெறுகின்றன . எனவே எமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களை நாங்கள் உரிய முறையில் பின்பற்றினால் இந்நோயிலிருந்து எம்மையும் எமது குடும்பங்களையும் பாதுகாத்து கொள்ளமுடியும் எனவே அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பாக தமக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவும்.
பைசர் தடுப்பூசியை பெற்றுத்தருமாறு கோரியவர்கள் இன்று மூன்றாவது பைசர்
தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் காட்டி வருகின்றார்கள் வவுனியா
மாவட்டத்தில் பைசர் தடுப்பூசியை பெற்று கொண்டவர்கள் மிகவும் குறைவானவர்களே
என்று மேலும் தெரிவித்துள்ளார் .