இலங்கையில் நிறுத்தப்படும் அரச துறை ஆட்சேர்ப்பு! நிதியமைச்சின் அறிவிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்
அரச துறை ஆட்சேர்ப்பு மற்றும் ஆட்சேர்ப்பு பரீட்சை முடிவுகள் தொடர்பில் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி அரச சேவை ஆட்சேர்ப்பு பரீட்சைகள் எதனையும் நடத்த வேண்டாம் என நிதியமைச்சு பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேற்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இதுவரை நடைபெற்ற ஆட்சேர்ப்பு பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலைகளில் உள்ள அழகியல், மனையியல் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாதுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும், பெறுபேறுகள் வெளியாகும் பட்சத்தில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த நடவடிக்கைக்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இவ்வாறான சூழலில் அரச ஊழியர்களை இன்று முதல் வழமை போன்று பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை திறைசேரியின் செயலாளரால் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக சில மாதங்களாக அரச ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைக்கு அழைக்கப்பட்டு வந்தனர்.
எனினும் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதாக அரசாங்கம் கருதுகின்ற நிலையில், அரச ஊழியர்களை வழமை போன்று சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை
இதேவேளை அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் தற்போது மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர், வரலாற்றில் இத்தகைய அழுத்தம் இருந்ததில்லை.
அந்த நிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும். கடந்த ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி குறைவடையும். இது வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவை அனைவரும் அனுபவிக்க வேண்டும்.
மேலும் பாடுபட்டு வேலை செய்ய முடியாத அரச உத்தியோகத்தர்கள் வீட்டிற்கு செல்லலாம். எந்த வேலைகளையும் செய்யாதிருப்பதவர்களுக்கு ஊதியத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என அவர் கடுமையாக அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.