செப்டெம்பர் 24இல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - வருண ராஜபக்ச அறிவிப்பு
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச அறிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று(15.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் திசைகாட்டியை நம்பியதற்கு
மேலும் தெரிவிக்கையில், "நாட்டின் ஜனநாயகத்தை ஒழித்து, சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தத்துக்கு அரசாங்கத்த உள்ளிருந்தே பல தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டுவரப் பங்களிப்பு வழங்கிய லால் விஜேநாயக்க மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கின்றார்.
மக்கள் திசைகாட்டியை நம்பியதற்கு ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட குழுவினரே காரணம் என்பதால், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக அவரால் வாக்களிக்க முடியாது. அவர் தனது தெளிவான நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
மாற்றத்தைக் கோரியவர்களுக்கும் அழைப்பு
இந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்துக்குள் தோற்கடிக்கும் பொறுப்பும் வல்லமையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் திசைகாட்டி குழுவினருக்கே உள்ளது.
அதனை நாடாளுமன்றத்துக்கு வெளியே தோற்கடிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஜனநாயக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுமாறு அனைத்து மக்களுக்கும், குறிப்பாக காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலம் முறைமை மாற்றத்தைக் கோரியவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.