சிறுமி ஆயிஷாவின் படுகொலைக்கு நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலைக்கு நீதிவழங்கப்பட வேண்டுமென கோரி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
பண்டாரகம
இந்நிலையில் நேற்றையதினம் பண்டாரகம, அட்டுலுகம மற்றும் அயற்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து சிறுமி ஆயிஷாவின் படுகொலைக்கு நீதி கோரியும், போதைப் பொருள் கும்பலுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கை
களுத்துறை, பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் அக்ரம் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி கடந்த 27ம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
கொலைக்குற்றவாளிகள் மட்டுமன்றி பிரதேசத்தின் போதைப் பொருள் மாபியாவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதே வேளை படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் இல்லத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் விஜயம் செய்து ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அத்துடன் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜபக்ஷ, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னர் விசாரணைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மன்னார்
சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி நாளைய தினம் காலை 10 மணிக்கு வடக்கு - கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் இடம்பெறவுள்ளது.
மன்னார் பஜார் பகுதியில் நாளை காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர்
மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து தொடர்ச்சியாக நாட்டில்
இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை
தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு
விரைவில் நீதி நிலை நாட்டபட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 8 மாவட்டங்களில் நாளை போராட்டம் இடம்பெறவுள்ளது.
எனவே பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு பெண்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் செய்திகள் : ஆஷிக்