அட்டலுகம சிறுமிக்கு நடந்தது என்ன - பொலிஸார் தீவிர விசாரணை
பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணம் கொலை என சந்தேகிக்கப்படுவதுடன், வேறு இடத்தில் படுகொலை செய்யப்பட்டு சதுப்பு நிலத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சிறுமியின் சடலம் வீட்டின் அருகே உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து அப்பகுதி மக்களால் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் வீட்டிற்கும் கடைக்கும் இடைப்பட்ட பகுதியில் சதுப்பு நிலம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர் தினசரி போதைப்பொருள் பாவனையாளர் என்பது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் உள்பட 22 பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான வான் ஒன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அதன் உரிமையாளரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் அவர் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும், அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்ததாகவும் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த வாக்குமூலங்களில் பாணந்துறையைச் சேர்ந்த சிறுமியின் தந்தையின் உறவினரிடமும் பொலிஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
குறித்த சிறுமி நேற்று காலை தனது வீட்டிலிருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள கோழிக்கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின்படி, அவர் கடையில் கோழியை வாங்கிவிட்டு வீடு திரும்பிய காட்சிகளையும் பொலிஸார் அவதானித்துள்ளனர். எனினும், அவரது வீட்டில் இருந்து 150 மீற்றர் தொலைவில் சிசிடிவி கெமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.
இதனையடுத்து நான்கு பொலிஸ் குழுக்கள் சிறுமியை தேடி விசாரணையை தொடங்கின. இவர் பேட்ட பிரதேசத்தில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்த போதிலும், அட்டலுகம பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளை கண்காணிக்குமாறு பிரதேசவாசிகளுக்கும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே, அப்பகுதியில் வசிக்கும் குழுவினர் சிறுமியின் உடலை சதுப்பு நிலத்தில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.
ஹொரணை நீதவான் மற்றும் நீதி வைத்திய அதிகாரி ஆகியோர் இன்று பிற்பகல் சிறுமியின் சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டனர்.