வரவு செலவுத் திட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் புறக்கணிப்பு – தொழிற்சங்கம் அதிருப்தி
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பணியாற்றும் சுமார் 2,400 பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்கொள்ளும் அலுவலக கொடுப்பனவு, பயணக் கொடுப்பனவு மற்றும் மோட்டார் சைக்கிள் வழங்குதல் தொடர்பான பிரச்சினைகள் பாதீட்டில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
பயணக் கொடுப்பனவுகள்
நகர்ப்புற பகுதிகளில் 1,500 ரூபாய் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 750 ரூபாய் மட்டுமே அலுவலக கொடுப்பனவாக வழங்கப்படுவதாகவும், நாளொன்றுக்கு சுமார் 100 கிலோமீற்றர் வரை பயணம் செய்தாலும் பயணக் கொடுப்பனவுகள் திருத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தகுதி பெற்றிருந்தும் இதுவரை மோட்டார் சைக்கிள்கள் கிடைக்காத அதிகாரிகளுக்கு அவற்றை வழங்குவதற்கான திட்டமும் முன்மொழியப்படவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எஸ். முத்துகுட கோரிக்கை விடுத்துள்ளார்.