ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்கான பாதையை புனரமைக்க கோரும் பொதுமக்கள்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்கான பிரதான பாதையின் புனரமைப்புத் தொடர்பில் இதுவரை கவனமெடுக்காமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக சல்லிக்கற்கள் பரவியிருக்கும் இந்த பாதையின் பயன்பாட்டினால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்குள் இந்த விடயம் உள்ளீர்க்கப்படாதது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியவாறே இருந்து வருகின்றனர்.
எனினும், இது தொடர்பில் உரிய தரப்புக்கள் இதுவரையும் கவனமெடுத்து எத்தகைய முன்னேற்றத்தையும் மேற்கொண்டதாக தெரியவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
புதிய பெயர்ப்பலகை
பிரதேச வைத்தியசாலைக்கு இருந்த பழைய பெயர்ப்பலகையினை மாற்றி புதிய பெயர்பலகை பொருத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர்கள் இது போல் ஏன் இந்த பாதை விடயத்தில் கவனமெடுக்காது இருந்து வருகின்றனர் என்ற கேள்வியை எழுப்புவதையும் சுட்டிக்காட்டலாம்.
பழைய பெயர்பலகை நிறம் மங்கியதால் இலகுவாக பார்த்து புரிந்துகொள்ள முடியாத நிலையில் அது மாற்றப்பட வேண்டிய சூழலில் இருந்து வந்தது.
அது அவதானிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்தியது பாராட்டுக்குரிய விடயமாகும்.
இது போலவே இரண்டு வருடங்களுக்கும் மேலாக சமூக ஆர்வலர்களாலும் பொதுமக்களாலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையான ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்கான பிரதான பாதையின் இன்றைய தோற்றத்தை மாற்றியமைத்து தரவேண்டும் என்பதை கருத்தில் எடுத்து மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தலும் அவசியமாகின்றதையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.
புதிய ஆண்டில் மாற்றம்
புதிய ஆண்டில் இது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் கவனமெடுக்கப்பட்டு மாற்றங்களை ஏற்படுத்த உரிய துறைசார் அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.
அத்தோடு இந்த பிரதான பாதையையும் மற்றும் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னுள்ள நிலப்பகுதியையும் சல்லிக்கற்களற்ற சாதாரணமாக வெறுங்கால்களுடன் நடந்து செல்லக்கூடிய தரையமைப்பை கொண்டதாக மாற்றிக்கொள்ள பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
மாற்றத்தைக் கோரும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் இது தொடர்பில் உரிய அணுகல்களை பின்பற்றி மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிப்பதே தற்போது அவர்களுக்குள்ள சிறந்த வழிமுறையாக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
வன்னி மாவட்ட எம்பிக்கள்
வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் இதுவரையிலும் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்ததாக வெளிப்படையான எந்த தகவல்களும் இல்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.
பிராந்திய வைத்தியசாலையில் படிப்படியான ஆரோக்கியமான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஒரு சூழலில் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் போராட்டத்தின் மூலமே நடைபெற்று வருவதாக இது தொடர்பில் பொதுமக்கள் பலருடன் மேற்கொண்ட உரையாடல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்த நிலை மாற்றமடைய வேண்டும். அப்படி மாற்றமடைய வேண்டுமெனில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறை மற்றும் குறைபாடுகளை அறிந்து கொண்டு நடவடிக்கைகள் எடுத்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளும் வண்ணம் திரும்ப வேண்டும்.
மக்களின் நீண்டகால கோரிக்கைகளை கருத்தில் எடுத்து மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியனவற்றை செய்து கொடுத்தல் எல்லோருக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |