அரசின் புதிய பயங்கரவாதச் சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் பிரசாரம் - சுமந்திரன் அறிவிப்பு
அரசால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பரந்துபட்ட மக்கள் பிரசாரத்தை ஆரம்பிக்கவிருப்பதாக சர்வஜன நீதி அமைப்பின் பிரதிநிதி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கமைவாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில், பயங்கரவாதம் எனும் பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலம்
அத்துடன், சந்தேகநபரைத் தேடுதல், கைது செய்தல் என்பன தொடர்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களும் ஆயுதமேந்திய படையினருக்கும் உரித்தாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஊடகங்ககுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள்,
"பயங்கரவாதத்தடைச்சட்டமோ அல்லது அதனைப் பதிலீடு செய்யும் வகையில் அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமோ ஜனநாயக நாடொன்றுக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மாறாக இது பெரும் அடக்குமுறையின் ஓர் ஆரம்பப்புள்ளியாகவே அமையும்" என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் ஆணையைப் பெற்ற தற்போதைய அரசு, புதிய சட்டங்கள் மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்குத் தவறுவது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
நாடளாவிய ரீதியில் பரந்துப்பட்ட பிரசாரம்
இவ்வாறானதொரு பின்னணியில் அரசால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பரந்துபட்ட மக்கள் பிரசாரத்தை ஆரம்பிக்கவிருப்பதாக சர்வஜன நீதி அமைப்பின் பிரதிநிதி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சிப்பீடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசு, கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாட்டை மீள நினைவுறுத்திய சுமந்திரன், தற்போது அதற்கு முற்றிலும் முரணான விதத்தில் செயற்படுகின்றது என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகத் தாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த விழிப்புணர்வுப் பிரசாரங்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் பங்கேற்பு, புதிய சட்டமூலத்தின் ஆபத்து உள்ளிட்ட விடயங்களைத் தெளிவுபடுத்தி சர்வஜன நீதி அமைப்பின் ஊடாக அடுத்த வாரத்திலிருந்து பரந்துபட்ட மக்கள் பிரசாரம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தோட்ட முகாமையாளர்களின் அடாவடித்தனங்களை ஒடுக்க தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய வேண்டும்! கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் விளாசல்
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri