இலஞ்சம் வாங்கும் சமாதான நீதவான்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
நுவரெலியா பிரதான நகரில் உள்ள சமாதான நீதவான்கள் சிலர் சத்தியக் கடதாசி மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்களுக்கு சேவையாற்றும் நோக்குடன் சமூகத்திலுள்ள கௌரவமான பிரஜைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சமாதான நீதவான் பதவிகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா சமாதான நீதவான்கள்
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் பிரமாணப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட பிற சான்றிதழ்களை சான்றளித்தல் மற்றும் அங்கீகரித்தல் ஊடாக பொது மக்களுக்கு இலவசமான சேவைகளையும் பணிகளையும் வழங்கும் நோக்குடன் நீதி அமைச்சரால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
தேசிய நலனுக்காகவும், சமூக மேம்பாட்டிற்கும் பங்காற்ற வேண்டியவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட வேண்டிய இந்த உயர் பதவி இன்று பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் கட்சி அமைப்பாளர்கள் கையில் இருக்கிறது.

ஆவணங்கள் அத்தாட்சிப்படுத்துவது மாத்திரமின்றி கிராமிய மக்கள் மத்தியில் சமாதானம் மற்றும் சகவாழ்வு உட்பட அனைத்து பொது நலப்பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் பங்கேற்க வேண்டும் என அனைத்து சமாதான நீதவான்களிடமும் அரசு எதிர்பார்க்கின்றது.
இந்த விடயம் நுவரெலியாவில் தலைகீழாக மாறும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பதவியானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பிற்கு முரணின்றியும், முற்றிலும் இலவசமாகவும் வழங்கப்பட வேண்டும்.
பண மோசடி
இது தொடர்பில், நீதி அமைச்சின் ஊடாக அனைத்து சமாதான நீதவான்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்கள் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெறும் சத்தியப் பிரமாணத்தின் போதும் உறுதி அளிக்கின்றனர். எனினும், மேற்படி அனைத்து சட்டதிட்டங்கள் மற்றும் உறுதிமொழிகள் அனைத்தையும் மீறும் வகையில் சமாதான நீதவான்கள் செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தோட்டபுறங்களில் அல்லது தூர இடங்களிலிருந்து வரும் மக்களின் பிரச்சினைகளையும் மன நிலைகளையும் நன்கு அறிந்து வைத்துள்ள சமாதான நீதவான்கள் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்தும், ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தியும், கையொப்பங்களை இட்டும் ஆயிரக்கணக்கான ரூபாக்களை மக்களிடம் சுரண்டும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இவ்வாறு நுவரெலியா பிரதான நகரில் செயற்படும் சமாதான நீதவான்களுக்கு நீதி அமைச்சு சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை திருகோணமலையிலிருந்து உருவாக்க வேண்டும் - இம்ரான் எம்.பி
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri