பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
பயங்கரவாத (PTA) தடுப்புச் சட்டமானது உடனடியாக நீக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் மாவட்டப் பிரதிஅமைப்பாளர் அப்துல் ஹசன் மொஹம்மது பஷீர் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று(22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இந்த சட்டத்தை நீக்குவதாக கூறினர்.ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னரும் சட்டத்தை இன்னும் நீக்கவில்லை.
பாரிய பாதிப்பு
இது சிறுபான்மை சமூகத்தினருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாகவும், 1979 ஆம் ஆண்டு நிரந்தரச் சட்டமாகவும் ஆக்கப்பட்டது.
இச்சட்டத்தினை உள்ளூர் மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கருத்தினை மிக வலுவாக வலியுறுத்தி வருகின்றார்கள்.
ஏன், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குறித்த சட்டத்தினை இல்லாமல் செய்ய வேண்டும். இது நாட்டிற்கு ஆபத்தானது என்ற கருத்தினை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.ஆகவே, இவர்கள் சொல்வதைப் போன்று இந்த சட்டத்தை அரசாங்கம் இல்லாமல் செய்ய வேண்டும்.
நஷ்ட ஈடு
குறித்த சட்டமானது தமிழ் பேசுகின்ற இனத்திற்கு எதிராக மிக கடுமையாக பிரயோகிக்கப்பட்டிருப்பதையும் , அதன் மூலம் சொல்லெனாத் துயரங்களை நம் மக்களில் சிலர் அனுபவித்திருப்பதையும் நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த சட்டத்தை இந்த நாட்டிலிருந்து அரசாங்கம் சொல்வதைப் போன்று உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும்.
அத்துடன் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் பேசுகின்ற அனைவருக்கும் நஷ்ட ஈட்டினை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




