வெளிநாட்டிலிருந்து கோட்டாபய அனுப்பிய செய்தி! ரணிலுக்கு ஆதரவாக நாளை கொழும்பில் நடைபெறவுள்ள மாநாடு
தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க சார்பில் நாளை கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கொழும்பு மலர் வீதியில் அமைந்துள்ள அரசியல் கட்சி அலுவலகத்தில் இன்று (23) விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு
இதன்போது, தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாதிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாளை கொழும்பில் ரணிலுக்கு ஆதரவாக நடைபெறவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட அரசியலின் முக்கியப்புள்ளிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் இருப்பதாகவும், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறித்த மாநாட்டிற்கு வரமாட்டார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசேட செய்தியாளர் மாநாடு
இருப்பினும், நாளை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாவிட்டாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவாக நிற்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதிகள் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, தலதா அத்துகோரள, ருவான் விஜேவர்தன, மனோ கணேசன், பி.திகாம்பரம், ரிஷாத் பதுய்தீன், ரவூப் ஹக்கீம், அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க சுகீஸ்வர பண்டார உட்பட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.




