தைரியமிருந்தால் தேர்தலை நடத்துங்கள்! அரசுக்கு ரஞ்சித் மத்தும பண்டார சவால்
அரசாங்கத்திற்குத் தைரியமிருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான ஆதரவை அளவிட்டுக் காட்டுமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சவால் விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று(6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துக்குத் தைரியம் இருந்தால் இப்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம்.
மாகாண சபைத் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க 43 சதவீத வாக்குகளையே பெற்றார். அதன் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சற்று அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், சில மாதங்களுக்குப் பின்னர் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அது 40 சதவீதமாகக் குறைந்தது.
இன்று மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இவர்கள் 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெறுவார்கள்.

தகுந்த காலத்தில் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களைத் தங்களது முதலாம் ஆண்டு ஆட்சிக் காலத்திற்குள் நடத்துவதாகத் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இன்று இவர்களால் தேர்தலை நடத்த முடியாது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஒரு கிராமத்திற்குள் கூடச் செல்ல முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.