மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்
தற்போதைய சூழ்நிலையில் நடப்பு வருடத்தினுள் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாது எனத் தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான கூட்டணிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அடுத்த ஆண்டளவிலேயே ஆராயப்படும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு தொடக்கம் மாகாண சபைகள் செயல்படாமல் உள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை பிரகடமானது அதிகாரப் பரவலாக்கம், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் காலங்கடந்த மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தால் உருவாக்கப்பட்ட சட்டச் சிக்கல் காரணமாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழு சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

2017-ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்த) சட்டம் எண் 17, கலப்பு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, பிரதிநிதிகள் 50மூ தொகுதிகள் மூலமாகவும், 50மூ விகிதாசாரப் பட்டியல்கள் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதற்குத் தேவையான தொகுதி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அறிக்கை 2018-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுத் தோல்வியடைந்தது.
மாகாண சபைத் தேர்தல்
புதிய தேர்தல் முறையின் கீழ் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வது செய்வது சட்டரீதியாகச் சவாலான மற்றும் கூடுதலான காலம் எடுக்கக்கூடிய ஒரு செயற்பாடாக இருக்கும் நிலையில், பழைய தேர்தல் முறையின்படியே தேர்தல்களை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடரச்சியாக வலியுறுத்துகின்றன.

இருப்பினும், மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறைத் தேர்வு குறித்து ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒரு சிறப்பு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே மாகாண சபைத்தேர்தல்களை நடத்துவது குறித்து அடுத்த ஆண்டிலேயே கவனம் செலுத்த முடியும் என்று அரசாங்கத்தின் அதிசக்தி வாய்ந்த நபரான டில்வின் சில்வா தற்போது தெரிவித்துள்ளார்.