மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை
மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர், அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான டெலினோர் (Telenor) மீது நோர்வே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின் ஒரு பகுதியாக ஓஸ்லோவிலுள்ள டெலினோர் நிறுவனத்தின் தலைமையகத்தில் நோர்வே குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை சோதனைகளை மேற்கொண்டனர்.
மியன்மாரிலிருந்து முற்றாக வெளியேறிய
மியான்மார் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்து வந்த காலப்பகுதியில், அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளை இராணுவத்திடம் கைமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இராணுவ ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் தமது ஊழியர்கள் சிறைவாசம், சித்திரவதை மற்றும் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்ற அசாதாரண சூழல் காரணமாகவே இத்தகைய முடிவை எடுக்க வேண்டியிருந்ததாக டெலினோர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அத்துடன், தடைகள் விதிக்கப்பட்ட கண்காணிப்புக் கருவிகளை வெளியாட்களுக்குக் கைமாற்றியமை மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சின் அனுமதியின்றி வர்த்தகத்தை விற்பனை செய்தமை தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2022 மார்ச் மாதத்துடன் மியன்மாரிலிருந்து முற்றாக வெளியேறிய அந்நிறுவனம், பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.