தொழில் வாய்ப்பின்றி இருக்கும் சுமார் 1,800 சுதேச வைத்திய பட்டதாரிகள் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சுதேச வைத்தியத்துறையை வலுப்படுத்துவதுடன், தொழில் வாய்ப்பின்றி இருக்கும் சுமார் 1,800 சுதேச வைத்திய பட்டதாரிகளுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது உள்நாட்டு வைத்தியத்துறை என்பது பாரம்பரிய அறிவையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்ட முக்கியமான மருத்துவத் துறையாகும் என சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய பாரம்பரிய மருத்துவ முறையை பாதுகாத்து, வளர்த்தெடுத்து, எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வது அரசாங்கத்தின் தார்மிக பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
சுதேச வைத்தியர்களின் சேவை
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி உள்ளிட்ட சுதேச மருத்துவ முறைகள் தற்போதைய சூழலில் போதிய முக்கியத்துவம் பெறுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதேச மருத்துவத்துறை சார்ந்த பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளை நிறைவு செய்து, உள்ளகப் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ள பல பட்டதாரிகள், தொழில்முறை தகைமைகளை பெற்றிருந்த போதிலும், பல ஆண்டுகளாக தொழில் வாய்ப்பின்றி காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1,800 சுதேச வைத்தியர்கள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதாகவும், சிலர் பட்டம் பெற்றும் சுமார் ஏழு ஆண்டுகளாக தொழில் வாய்ப்பின்றி இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளுக்கு சுதேச வைத்தியர்களின் சேவை அத்தியாவசியமானதாக இருந்த போதிலும், கொள்கை வகுப்பாளர்களால் அவர்களது பங்களிப்பு போதியளவில் உணரப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துறைசார் விசேட கல்வியை பெற்றுள்ள சுதேச வைத்தியர்கள், தங்களது தகைமைக்கு பொருத்தமான வேறு தொழில்களை நாடிச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனால் அவர்கள் தொழில் மற்றும் மன அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விக்காக முதலீடு
அதேவேளை, நாட்டில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய நோய்களை கட்டுப்படுத்துவதிலும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சுதேச மருத்துவத்துறைக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளதாகவும் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாகாண மட்டத்தில் சுதேச மருத்துவ சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் போதுமான அளவில் இல்லாதிருப்பது மற்றுமொரு முக்கிய குறைபாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மாகாணங்களில் சுதேச மருத்துவ வைத்தியசாலைகள் இயங்கி வரும் நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வாறான வசதிகள் போதியளவில் இல்லாதிருப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊவா மாகாணத்திற்கான சுதேச மருத்துவ வைத்தியசாலை தியத்தலாவையில் இயங்கி வருவதாக குறிப்பிடப்பட்டாலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்களின் தேவைக்கு ஏற்ப சுதேச மருத்துவ சேவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் சுதேச மருத்துவத்துறைக்காக பெருமளவு அரச நிதி செலவிடப்பட்டு பட்டதாரிகளை உருவாக்கிய பின்னர், அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்காமல் இருப்பது நாட்டின் மனித வளத்தையும் கல்விக்காக முதலீடு செய்யப்பட்ட வளங்களையும் வீணடிப்பதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான தொழில் வாய்ப்பு
மேலும், நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை ஓரளவாவது நிவர்த்தி செய்வதற்கு சுதேச வைத்தியர்களின் பங்களிப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலைத்தேய மருத்துவத்துறையில் கல்வி பயிலும் பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும், சுதேச மருத்துவப் பட்டதாரிகளுக்கு அவ்வாறான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, சுதேச மருத்துவத்துறையில் கல்வி பயின்ற பல பட்டதாரிகள் தங்களது கல்வித் தகைமைக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பின்றி, மாற்றுத் துறைகளில் வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு, துறைசார் தகைமை பெற்றுள்ள சுதேச வைத்தியர்களுக்கு முறையான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
'வளத்தை காப்போம், வளமாக வாழ்வோம்' மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' போன்ற தேசிய வேலைத்திட்டங்களிலும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் சுதேச வைத்தியர்களின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்கும், தொற்றா நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் சுதேச மருத்துவத்துறையின் பங்களிப்பு அவசியமானது என்பதை அரசாங்கம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக உள்ளது.