இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை: ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் அதிரடி முடிவு
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு வந்த கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி எதிர்வரும் 30ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
உண்ணாவிரத போராட்டம்
ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நேற்றைய தினம் (18) நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவை முடிவெடுத்துள்ளனர்.
மேலும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகு முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரண தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் எதிர்வரும் மாதம் 1ஆம் திகதியில் இருந்து தங்கச்சி மடத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

