இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் - செம்மணியில் களமிறங்கும் போராட்டக்காரர்கள்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை(22.07.2026) காலை செம்மணியில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
454 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் இதனுடன் தொடர்புடைய உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

எனவே, இந்தப் புதைகுழியைப் பார்வையிட நாளை(22) வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் ஊடாக சர்வதேச விசாரணைக்கு வழியேற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, நாளை காலை 8 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.