அநுரவின் திட்டத்தால் கொந்தளிக்கும் Gen-Z தலைமுறை - நாமலின் கைதில் சதி - எச்சரிக்கும் ரணில் தரப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அவரது கைதுக்குக் கண்டனம் தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவின் தலைமையில் செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தின் வெற்றியைத் தடுப்பதே இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கம் என்பது தெளிவாகிறது என்று UNP தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சிக்கல்..
'தேசிய மக்கள் சக்தி' (NPP) கட்சியின் தலைவரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு நாடு முழுவதும் பயணம் செய்து பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமையை, நாமல் ராஜபக்சவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று UNP சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளை நவீன நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றும், குறிப்பாக 'Gen-Z' எனப்படும் இன்றைய இளம் தலைமுறையினர் இத்தகைய செயல்களை நிராகரிப்பார்கள் என்றும் UNP மேலும் தெரிவித்துள்ளது.
இத்தகைய தரக்குறைவான செயல்கள் தற்போதைய அரசாங்கத்தின் மோசமான நிலையையே வெளிப்படுத்துவதோடு, மக்களிடையே அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைவதற்கே வழிவகுக்கும் என்று UNP கூறுகிறது.
மக்கள் தலைவர்களைக் கைது செய்வதன் மூலம் மட்டும் அவர்களின் செல்வாக்கைக் குறைத்துவிட முடியாது என்று அரசாங்கத்தை அக்கட்சி எச்சரித்துள்ளது.