ஐ.நா அலுவலகத்தில் கடிதம் சமர்ப்பித்துள்ள காலிமுகத்திடல் போராட்டக்கள அமைப்பின் உறுப்பினர்கள்
பயங்கரவாத தடைச்சட்டம் மீது கவனம் செலுத்துமாறு கோரி, காலிமுகத்திடல் போராட்டக்கள அமைப்பின் உறுப்பினர்கள் கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இக் கடிதம் நேற்று காலிமுகத்திடல் போராட்டக்கள உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி அமைதிப் போராட்டத்திலும் இந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்ப்புக்கு உள்ளாகும் புதிய அரசாங்கம்
ஜனாதிபதி பதவியில் இருந்த கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கட்டாயப்படுத்திய போராட்டக்காரர்களை தடுத்து வைக்க கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தியதற்காக இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச எதிர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம்
அவசரகாலச் சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான பேரணியின் போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வசந்த முதலிகே உட்பட மூன்று மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதித்துறை மறுஆய்வு இல்லாமல் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள பயங்கரவாத
சட்டம் அனுமதிக்கிறது என காலிமுகத்திடல் போராட்டக்குழுவின் உறுப்பினர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.