பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாணவர்கள் கைது: வடமாகாண ஊடக அமையம் கண்டனம்
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை வடமாகாண ஊடக அமையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் வடமாகாண ஊடக அமையத்தினால் நேற்று(24) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, “சமூகத்தின் செயற்பாட்டாளர்களுடன் இணைத்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மாணவச்சமூகம் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
மாணவச்சமூகம் மீதான அடக்குமுறை
இவ்வாறான அரசாங்க அடக்கு முறைகளை உடன் நிறுத்தி நாட்டினை பொருளாதார அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனைத்து பல்கலைக்கழக ஏற்பாட்டாளர் உட்பட மூவர் பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணி மற்றும் விவசாய மறு சீரமைப்பு பிரதாணி உட்பட பலர் மீது அரசாங்க அடக்குமுறை பியோகித்து மக்களின் உரிமைக்குரல்களை நசுக்க பயன்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை உடன் நீக்கி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சமூகச் செயற்பாட்டார்களை உடன் விடுவிக்குமாறும் அவசரகால சட்டத்தை நீக்குமாறும் கோருகின்றோம்.
இவ்வாறான மக்கள் போராட்டங்களின் போது பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்தடுப்புச் சட்டம்
மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனநாயக வழியில் போராடியவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளமை இலங்கைக்கு வெளிநாடுகளில் ஜனநாயகத்தை விரும்பும் நாடுகளின் தலைவர்கள் இடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தவில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போதைய பொருளாதாரப் போரில் சிக்கியுள்ள இலங்கைத் திருநாட்டினை மீட்டெடுப்பதற்குரிய வழிகளை இனங்கண்டு துரித வளர்ச்சியடைய வேண்டிய நடவடிக்கைகளை கைவிட்டு சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அடக்கு முறைகளைப் பிரயோகித்து வருகின்றமை நல்லெண்ண அடிப்படையாகத் தென்படவில்லை்.
எனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள
மாணவர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் விடுவித்து ஜனநாயக நீரோட்டத்தில்
மாணவர்களுடன் இணைந்து நாட்டினைக்கட்டியெழுப்ப அரசாங்கம் முன்வந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும்” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.