பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரிக்கை
திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து, கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிள்ளைகளுக்கும் பயங்கரவாத அமைப்பாக அரசாங்கம் கூறும் தரப்பினருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
அவர்களுடைய வயதுக்கு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றதே அவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அதன் பின்விளைவுகள் பற்றி அறியாமல் தவறுதலாக சில பதிவுகளைப் பதிவிட்டிருந்தார்கள்.
அது தவறுதான். அந்த தவற்றை மன்னித்து விடுதலை செய்ய ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை அவர்கள் செய்யமாட்டார்கள் எனவும் மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டார்கள்.
இவர்கள் தொடர்பாக வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவர்களுடைய உழைப்பில்தான் எங்களுடைய வாழ்வாதாரம் சென்றது.
இப்போது நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றோம். எனவே எங்களுடைய குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புகைப்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலையில் சில இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த வருடமும் இவ்வருட ஆரம்பத்திலும் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இவர்களுடைய வழக்குகள் மூதூர் மற்றும் திருகோணமலை நீதி மன்றங்களிலும் இடம்பெற்றுவருகின்றது. அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் 48வது மகாநாடு இம்மாதம் 13ம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இதில் முதல் விடயமாக இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயம் பேசப்படவுள்மையும் குறிப்பிடத்தக்கதாகும்.