தாகத்தில் தகிக்கும் நெடுந்தீவு! அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப். 24 ஆம் திகதி மாபெரும் போராட்டம்
யாழ். நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் குடிதண்ணீர், போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி, எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது நெடுந்தீவு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
குடிதண்ணீர் நெருக்கடியும் நிலத்தடி நீர் பாதிப்பும்
நெடுந்தீவில் உள்ள 1,418 குடும்பங்களில் 688 குடும்பங்களுக்கு மட்டுமே நீர் வழங்கல் சபை மூலம் குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. இதில் 488 குடும்பங்களுக்கு சாராப்பிட்டி பகுதியிலிருந்து வழங்கப்படும் நீர் தற்போது உவர்த்தன்மையுடையதாக மாறியுள்ளது.
எஞ்சிய 730 குடும்பங்களுக்கு எவ்வித நீர் இணைப்புகளும் இல்லை. முறையற்ற நீர்ச் சுரண்டலால் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதோடு, மக்கள் குடிநீருக்காக நாளாந்தம் அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது.
முடங்கும் கடல் போக்குவரத்து
நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்திற்குப் பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபை, தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடதாரகை திருத்த வேலைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், நெடுந்தாரகை எப்போது பழுதடையும் எனத் தெரியாத நிலையிலேயே இயங்குகிறது.
50 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘குமுதினி’ படகு கடந்த மூன்று மாதங்களாக செயலிழந்துள்ளது. பல கோடி ரூபா செலவிடப்பட்டும் அதன் இயந்திரங்கள் முறையாகத் திருத்தப்படவில்லை. இதனால் நோயாளிகள், அரச ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறையும் கல்விச் சவாலும்
தீவில் உள்ள மூன்று உயர்தரப் பாடசாலைகளிலும் போதிய ஆசிரியர் வளம் இல்லை. உயர்தரத்தில் வரலாறு, புவியியல், அரசறிவியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஒரு தமிழ்ப் பாட ஆசிரியர் இரண்டு பாடசாலைகளுக்குப் பகிரப்பட்டு கற்பிக்கும் அவலநிலை காணப்படுவதுடன், தொழிநுட்பம் மற்றும் கலைப் பாடங்களுக்கும் நீண்டகாலமாகப் பற்றாக்குறை நிலவுகின்றது.
சுகாதாரத் துறையின் வீழ்ச்சி
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் மருந்துக் கலவையாளர் இல்லாததால், விடுமுறை நாள்களில் வைத்தியசாலை இயங்குவதில்லை. ஏனைய நாட்களில் மருந்து விநியோகம் மதியத்துடன் நிறுத்தப்படுகின்றது.
அத்தோடு, தாதிகள் மற்றும் சிற்றூழியர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. பற்சிகிச்சை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கே குடிதண்ணீர் இல்லாத அவலநிலை நீடிக்கின்றது.
வீதி அபிவிருத்திப் புறக்கணிப்பு
நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியின் எஞ்சிய 2 கிலோமீற்றர் பகுதி நீண்டகாலமாகத் திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ளது. இதனால் வைத்தியசாலை மற்றும் பிரதேச செயலகத்திற்குச் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, பொறுப்புக்கூற வேண்டிய திணைக்களங்கள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2026.04.24 அன்று முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்துக்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் நெடுந்தீவு மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri