வவுனியா திருஞானசம்மந்தர் வித்தியாலய அதிபரை மாற்றுமாறு கோரி ஆர்பாட்டம்
வவுனியா, ஶ்ரீஇராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அதிபரை மாற்றுமாறு
கோரி பெற்றோர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (24.07.2024) காலை பாடசாலை முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
கல்வி நிலையில் வீழ்ச்சி
இதன்போது, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, எமது பாடசாலை கல்வி நிலையில் வீழ்ச்சி நிலையினை கண்டுள்ளது. பாடசாலையில் இடம்பெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கணக்கறிக்கைகள் எவையும் சமர்பிக்கப்படவில்லை.
அங்கு இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக பெற்றோர்களிற்கு அறிவித்து கலந்துரையாடும் நடவடிக்கையினையும் அவர் முன்னெடுப்பதில்லை. இவ்வாறான காரணங்களால் பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தால் பாடசாலையினை இழுத்து மூடவேண்டிய நிலைமையே ஏற்ப்படும். எனவே உடனடியாக அவரை மாற்றித்தருமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.
மாணவர்களது கல்வி வளர்ச்சி
குறித்த விடயம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் தெரிவிக்கையில் , நான் பொறுப்பேற்ற பின்னர் பாடசாலையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். குறிப்பாக வெளிநபர்களின் உதவிகளை பெற்று மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு உரிய தேவைகளை செய்துள்ளோம்.
வறுமைப்பட்ட மாணவர்களின் தேவைக்கருதி சத்துணவு திட்டத்தினை விஸ்தரித்துள்ளோம்.
அனைத்திற்கும் கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலையின் நிர்வாகத்தை ஒரு சில நபர்கள் சொல்வது போல நடாத்தமுடியாது.
சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் சரியாக செயற்பட்டால் நாம் பாடசாலையில் மாணவர்களுடன் முரண்பட வேண்டிய தேவை ஏற்படாது என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |