போராட்டகளமாக மாறிய இலங்கை: அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள் (Photos)
கோட்டா - ரணில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக தற்போது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசணை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - அபயபுர சுற்று வட்டத்தில் இன்று (09) காலை 10 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுள்ளது.
கோட்டாபய - ரணில் ஆட்சியை விரட்டி அடிப்போம் என்ற தொனிப்பொருளிலேயே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கைகளை விடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோமரங்கடவல - மொரவெவ, மஹதிவுல்வெவ, கந்தளாய் போன்ற பகுதிகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன்
ஹட்டனில் உள்ள மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் நடைபெறும் 'கோட்டா கோ ஹோம்’ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே ஹட்டன் மக்கள் இன்று (09) ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
அதன் போது ஆரப்பாட்டகாரர்கள் ஹட்டன் நகரத்திலிருந்து மல்லிகைப்பூ சந்திக்கு சென்று மீண்டும் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரம் வரை கோட்ட கோ ஹோம் என்று கோஷமிட்டவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
"பாடசாலை திறக்க முடியாத அரசாங்கத்தை விரட்டியடிப்போம், எண்ணை, கேஸ் இல்லாது மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்" போன்ற வாசங்கள் எழுதிய பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்திய வண்ணம் எதிர்ப்பு ஊர்வலத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மக்களை தடுப்பதற்காக நேற்று(8) ஊரடங்கு போட்டதை கண்டித்தும், போராட்டகாரர்களை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடையூறு ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த போராட்டத்தினை நடத்தியுள்ளனர். மேலும் சிறிது நேரத்தில் போராட்டகாரர்கள் களைந்து சென்றுள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள், இளைஞர்கள், சட்டத்தரணிகள், பேருந்து ஊழியர்கள், அரச ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி: மலைவஞ்சன்
தலவாக்கலை
தலவாக்கலையில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே தலவாக்கலை - சென்கிளயர் தோட்டத்தில் இன்று(9) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றுள்ளனர்.
மக்களை வதைக்கும் 'கோட்டா - ரணில்' அரசு எவ்வித நிபந்தனையுமின்றி பதவி விலகவேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதுடன், அவ்வாறு இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் உரைத்துள்ளனர்.
அதேபோல பெருந்தோட்டதொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், காணி உரிமை வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோஷங்களும் எழுப்பட்டுள்ளன.
செய்தி: கிரிஷாந்தன்
மட்டக்களப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - கிரான்குளம் பகுதியிலும், மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அரசுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறும், கோட்டா கோ ஹோம் என்று கோஷமெழுப்பியவாறு இன்று(9) ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ரீ.தயாளந்தன், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என 100க்கும் அதிகமான மக்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
பொலிஸார் இதன்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ருசாத்
வவுனியா
கோட்டா - ரணில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் இடம்பெற்றது.
வவுனியா, பூந்தோட்டம் சந்தியில் இருந்து கறுப்பு கொடிகளுடன் கோட்டா - ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு துவிச்சக்கர வண்டியில் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவும், கொழும்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மடுகந்தை மற்றும் ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக வருகை தந்த மக்கள் குறித்த போராட்டக்காரருடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக கோசம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை முன்வை“, “அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு வா”, “நிறுத்து நிறுத்து விலையுயர்வை நிறுத்து“, “உழைக்கும் மக்களை பட்டினி போடாதே”, “கடனுக்குள் தள்ளியோர் உல்லாச வாழ்வு நாட்டு மக்கள் பட்டினச் சாவு”, “விவசாயிகளை வாழவிடு”, “கோட்டா - ரணில் வீட்டுக்கு போ” என கோசங்களை எழுப்பியிருந்தனர்.
செய்தி- தீபன்
அம்பாறை
கோட்டா வீட்டுக்கு போ எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இன்று இம்மாவட்டத்தின் மாளிகைக்காடு சந்தி பகுதியில் இருந்து கல்முனை நகர் வரையிலான துவிச்சக்கரவண்டி ஊடாக பயணம் செய்து கோட்டா கோ ஹோம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் பொதுமக்கள் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்ததுடன் கல்முனை வரை போராட்டம் ஊர்வலமாக துவிச்சக்கரவண்டியில் சென்று முடிவடைந்தது.
இதன் போது துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த போராட்டக்காரர்கள் “எண்ணெய் இல்லை சமையலுக்கு எரிவாயு இல்லை ”, “கோட்ட ரணில் - நல்ல துக்கம் நல்ல துக்கம்” “ரணில் கோட்டா, கோட்டா ரணில் வீட்டுக்குப் போ”, “கோட்டா ரணில் - சோடி வேண்டாம்” ,“மீனும் இல்லை வலையும் இல்லை, டீசல் இல்லை - கல்வியும் இல்லை பெட்ரோல் இல்லை , வாழ்க்கை செலவு வான் அளவு தொழில் இல்லை, கொள்ளையிட்ட டொலர் இல்லை”என கோஷம் எழுப்பினர்.
இதே வேளை மற்றுமொரு கோட்டா கோ ஹோம் எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி கல்முனைத் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றசாக் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது நாட்டின் பெரிய தேசியக்கொடி ஒன்றினை ஏந்தி சென்ற போராட்டக்காரர்கள் சாய்ந்தமருது கல்முனை எல்லைப்பகுதியில் இருந்து ஆம்பித்து சிறிது தூரம் ஊர்வலமாக சென்று குறித்த போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இப்போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமருக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். மேற்குறித்த இவ்விரு போராட்டங்களும் இன்று கொழும்பில் இடம் பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி -பாறுக் ஷிஹான்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தினாலும் பொதுமக்களினாலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று காலை காந்திபூங்காவில் ஒன்றுகூடிய இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
தற்போதைய நிலையில் மருந்தகங்களுக்கு மருந்துவராத காரணத்தினாலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஊழியர்கள் கடமைக்கு வராத காரணத்தினாலும் மக்களும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதுடன் தாமும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர்.
இதேபோன்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பதவி விலகி ஆட்சியை சிறந்த முறையில் கொண்டு செல்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி - குமார்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய பொருளாதார நெருடிக்கடி உட்பட நாட்டின் நிலைமையினை கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி நாட்டினை கொண்டுசெல்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய ஊழியர்கள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதிக்கு எதிரான கோசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் கோட்டா கோ ஹோம் போன்ற கோசங்களை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினார்கள்.
செய்தி குமார்
மலையகம்
தற்போதைய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மலையக மாவட்டங்களில் எட்டு திக்கிலும் 'கோட்டா கோ ஹோம்' என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது. மேற்படி மாவட்டங்களில் பிரதான மற்றும் சிறு நகரங்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு செல்லவில்லை.
தமது குடியிருப்புகளுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்கவிட்டிருந்தனர். அதேபோல தோட்டவாரியாக எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து முடங்கியிருந்தது. மேலும் சில இடங்களில் மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, தலவாக்கலை உட்பட சில நகரங்களில் போராட்டம் உக்கிரமடைந்தது. கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் மக்கள் சக்தியாக ஒன்றிணைந்து, கோட்டா- ரணில் அரசே பதவி விலகு என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தலவாக்கலை மற்றும் கொட்டகலை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நகரங்களில் கடைகள் மூடப்பட்டு, மக்கள் போராட்டத்துக்கு வர்த்தகர்கள் ஆதரவு வழங்கினர்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். அத்துடன், கோட்டா கோ கம கிளையொன்றும் தலவாக்கலை நகரில் உதயமானது.
ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலகும்வரை போராட்டத்தை தொடரும் வகையிலேயே கோட்டா கோ கம கிளை உருவாக்கப்பட்டுள்ளது. தலவாக்கலையையும், அதனைசூழவுள்ள பகுதிகளில் வாழும் பலர் போராட்டத்தில் பங்கேற்று, கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கினர்.
இதேவேளை, கொட்டகலை நகரிலும், நகர வர்த்தகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். அத்தோடு, கொட்டகலை கொமர்ஷல் பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
செய்தி- திருமால்
திருகோணமலை
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பாடசாலைக்கு முன்னால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (09) பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டா -ரணில் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
நாங்கள் இந்த நாட்டில் இருக்க வேண்டும். இந்த நாட்டை விட்டு கோட்டா வெளியேற வேண்டும் எனவும் மக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி- பதுர்தீன் சியானா



