மயிலத்தமடு - மாதவனை பகுதியில் கண்டனப் போராட்டம்
மயிலத்தமடு - மாதவனை பகுதியில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்து செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டமானது நேற்றைய தினம்(03.09.2026) நடைபெற்றுள்ளது.
ஆராயப்பட்டுள்ள விடயங்கள்
நேற்று ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கூட்டமானது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் அரச மற்றும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டுள்ளதுடன் குறிப்பாக ஏறாவூபற்று பிரதேச எல்லைக்குள் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் ஏறாவூர் நகர சபையால் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் விலங்கு கழிவுகளினால் மக்கள் பாதிப்படைகிற விடயம் தொடர்பாகவும், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மாரி மழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கான முன் ஏற்பாடுகள் மற்றும் கஷ்டப் பிரதேசங்களுக்குச் செல்லும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை சீரமைப்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.





