நீதிமன்ற உத்தரவை மீறி தொடரும் போராட்டம் - அரசாங்கத்தை எச்சரிக்கும் பலாங்கொட கஸ்ஸப தேரர்
அநுராதபுரம் - ருவன்வெலி சேயா அருகே பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம், நீதிமன்ற உத்தரவையும் மீறி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, நேற்று(07.11.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் புனித நகரத் திட்டத்திற்கு எதிராக பலாங்கொட கஸ்ஸப தேரர் தலைமையில் கடந்த 6ஆம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போராட்ட இடத்தில் உயரமான கட்டமைப்பொன்றை அமைக்க முயன்றபோது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம்
இதனைத் தொடர்ந்து, ருவன்வெலி சேயா மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட புனிதப் பகுதிகளிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்றும், அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குகளும் பொதுமக்களும் அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கம் அநுராதபுரம் புனித நகரத் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் வரை சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.