காற்றாலைக்கு எதிராக கட்டைக்காட்டில் வெடித்தது போராட்டம்
மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்த்து உள்ளூர் மக்கள் எழுப்பிய சமாதானமான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் வணக்கத்திற்குரிய பங்கு தந்தையர்கள் மீதும் காவல்துறை மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் அமைதி வழி போராட்டம் ஒன்று நேற்றையதினம்(28)முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மக்களுக்கு பாதிப்பாக அமையக்கூடிய காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது அரசு அடக்குமுறை பயன்படுத்தப்படுகிறது.
வெடித்தது போராட்டம்
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீதும்,அருட் தந்தையர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை கண்டித்தும் மன்னார் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கட்டைக்காடு பொதுமக்களின் ஒழுங்குபடுத்தலில் கட்டைக்காடு பங்கு தந்தை தலைமையில் நேற்றையதினம்(28) காலை 7:30 மணி அளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அழிக்காதே அழிக்காதே மன்னாரை அழிக்காதே, வேண்டாம் வேண்டாம் காற்றாலை திட்டம் வேண்டாம் ,அள்ளாதே அள்ளாதே எமது மண்ணை அள்ளாதே போன்ற வாசகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டைக்காடு பொதுமக்கள்
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்டைக்காடு பங்கு தந்தை வசந்தன் அடிகளார்,
மன்னார் தீவில் எமது மக்களுடைய சாத்வீக போராட்டம் அரசு இயந்திரத்தால் ஒடுக்கப்படுவதை கண்டித்து கட்டைக்காடு பொதுமக்களாக நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் மன்னார் எங்களுடைய பூர்வீக சொத்து, அபிவிருத்தி என்னும் பெயரில் மன்னார் மக்கள் பாதிக்கப்படுவதையும் மன்னாருடைய வளங்கள் சூரையாடப்படுவதையும் வன்மையாக கண்டித்து அப்பகுதி மக்கள் சாத்வீகமான போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனால் இந்த அரசாங்கம் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி மன்னார் மக்களுடைய சாத்வீக போராட்டத்தை அசிங்கப்படுத்தியுள்ளார்கள் அத்தோடு அப்பாவி மக்கள், அப்பாவி மத குருமார்களை தாக்கி இருக்கிறார்கள் உடனடியாக இந்த அராஜகம் நிறுத்தப்பட வேண்டும். பல வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஏனைய அரசாங்கங்களை போன்றுதான் செயல்பட எத்தணிக்கின்றார்கள்.
இன்னும் எமது நாட்டில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை ,அரசியல் கைதிகள் இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள், அத்தோடு எமது மன்னார் தீவின் வளங்களை சூரையாடுவதற்காக திரைமறைவில் பல காய்கள் நகர்த்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இது சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

விஜயின் கரூர் பரப்புரையில் திடுக்கிடும் தகவல்கள் பல! அமைச்சர் அமித்ஷா அதிரடி!! கலக்கத்தில் தமிழக அரசு
காற்றாலைக்கு எதிரான போராட்டம்
உடனடியாக அரசாங்கம் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை கைவிட்டு எமது தேசத்தில் எமது மக்கள் உரிமையோடும்,இறைமையோடும்,தங்களுடைய வளங்களை தாங்களே பயன்படுத்தக்கூடிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இதனை சர்வதேச சமூகம் பாராமுகமாக இருக்காமல் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் எமது மக்களுடைய உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி கட்டைக்காடு பொது மக்களாக இன்றைய காலை வேளையில் இந்த சாத்வீகமான போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கிறோம்.
அத்தோடு ஏனைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை ஒடுக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆகவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு எங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று சொன்னால் சர்வதேச தலையீடு கண்டிப்பாக தேவை என்பதனை மக்கள் தற்போது தெளிவாக புரிய தொடங்கி இருக்கிறார்கள்.
அதேபோன்று மக்களாக குறித்த மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றபோதும் மக்களின் சாத்வீகமான போராட்டத்தை சிலர் மதச்சாயம் பூச முனைகின்றார்கள் அருட்தந்தையர்கள், இந்துக் குருக்கள், முஸ்லிம் மத குருமார்கள் ,ஆகியோர் இன மத பேதமின்றி கலந்து கொள்கிறார்கள்.
ஆகவே அரச இயந்திரம் மதச்சாயம் பூசி மக்களின் சாத்வீக போராட்டத்தை சேறு பூச முனையாமல் அவர்களுடைய இறைமை பாதுகாக்கப்பட கொடுத்த வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார்.



