வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இலங்கைக்கான சோசலிச கட்சியின் ஏற்பாட்டில், நாளைய தினம் (17.10.2026) காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்களைத் தாமதமின்றி நடத்துதல், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், வடக்கு - கிழக்கில் மக்களின் காணி உரிமைகளைப் பாதுகாத்து ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்தல் ஆகியவை இவ்வார்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலியுறுத்தப்படும் விடயம்
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இலங்கைக்கான சோசலிச கட்சி வலியுறுத்துகின்றது.

இது தொடர்பான இலங்கைக்கான சோசலிச கட்சியின் கருத்தில் மேலும், அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக ரீதியில் சிந்தித்துச் செயல்படுதல் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கக்கூடிய ‘Protection of the State from Terrorism Act (PSTA)’ எனப்படும் முன்மொழியப்பட்ட சட்டத்தைக் கொண்டுவருவதை எதிர்க்கிறோம்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்
PSTA சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கின்றோம். ஜனநாயகம், சமூக நீதி, தேசிய இனங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலையான சமாதானத்தையும் நீதியான சமூகத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே இவ்வார்ப்பாட்டத்தின் நோக்கமாகும்.
எனவே, இக்கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது ஜனநாயக உரிமைகளையும் ஆதரவையும் வெளிப்படுத்துமாறு இலங்கைக்கான சோசலிச கட்சி அழைப்பு விடுக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.