யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்! பேராசிரியரின் அறிவுரைக்கும் எதிர்ப்பு (Video)
யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வேண்டி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்திற்கு வந்த யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவர்களை சமரசம் செய்து பல்கலையின் வாயில்களை திறப்பதற்கு முயற்சித்துள்ளார்.
எனினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இவ்விடத்தில் சற்று குழப்பம் ஏற்பட்டிருந்ததாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடந்துவரும் நிலையில், சில மாணவர்களின் போராட்டத்தினால் பரீட்சைக்கு இடையூறு ஏற்பட்டதையடுத்தே போராசிரியர் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருந்த பரீட்சைகள் இன்றைய தினமே திட்டமிடப்பட்டிருந்தது. எனவும், அதனை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டு உங்களது போராட்டத்தை முன்னெடுங்கள், கோவிட் சூழலில் பரீட்சைகளை நடத்துவதிலேயே கடும் சிரமம் இருந்த போதும் பல சவால்களை எதிர்கொண்டு கிட்டத்தட்ட 600இற்கு மேற்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சை எழுதுவதற்கு வருகை தந்து திரும்புகின்ற ஒரு துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களாகிய நீங்கள் உரிமைக்காக போராடுவது போன்று ஏனைய மாணவர்களுடைய உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என சம்பவ இடத்திற்கு வருகை தந்த பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் என்னுடைய பிள்ளையும் கூட கோவிட்டால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் உள்ள நிலையில் நான் இந்த பரீட்சைக்காக கடமையாற்ற வந்துள்ளேன்.
ஒவ்வொருவருடைய கஷ்டங்களையும் புரிந்து கொள்ளுங்கள் என பேராசிரியர் ரகுராம் மாணவர்களிடம் வினயமாக கேட்டுள்ளார். எனினும் மாணவர்கள் அதனை ஏற்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி இன்றைய தினம் மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாக செயலிழந்து கிடக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை அங்கீகரிக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டம் காரணமாக பல்கலைகழக ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியாத நிலையேற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா இன்றைய தினம் பரீட்சைகள் நடந்து கொண்டிருப்பதால் வாயில் கதவை திறக்கும் படியும், பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் மாணவா்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
என்ற போதும் எழுத்தில் முன்வைத்த கோரிக்கை 4 மாதங்களாக எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி மாணவா்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.