ஈஸ்டர் தாக்குதல்: உரிய விசாரணை நடத்துக! கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தி, கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இன்று (16.06.2026) பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக் கட்சி, பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் சுயாதீன சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டு ஏற்பாட்டில் இந்த விசேட கவனவீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது, பாரபட்சமற்ற முறையான நீதி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதிவழியில் தங்களது கோரிக்கைகளை முழக்கமிட்டனர்.
இந்த விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தப்பவிடப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள, பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளும், பொதுமக்களும் தங்களின் முழுமையான ஆதரவை இந்தப் போராட்டத்துக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

