சாவகச்சேரியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கான தயார்ப்படுத்தல் - அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு
யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நாளைய தினம் (12.09.2026) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த போராட்டம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாளை காலை ஏழு மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்போது மாபெரும் கண்டன பேரணியும், உண்ணாவிரத போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பேரணியும், உண்ணாவிரதப் போராட்டமும்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் குறித்த பேரணியும், உண்ணாவிரதப் போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் கட்சி பேதங்களின்றியும், காணாமலாக்கப்பட்ட உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.