மன்னாரில் கனியவள மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அவுஸ்திரேலியா நாட்டினை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று கனியவள மண் அகழ்விற்கான ஆய்வினை மன்னாரில் முடித்து தற்போது மண் அகழ்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவித்து இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அமைப்பின் இணைவில் மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன் இன்று காலை குறித்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் சர்வ மத தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கனியவள மண் அகழ்விற்கு எதிராக கையெழுத்து பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், குறித்த கண்டன போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்று வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சம் நிலவி வரும் நிலையில் குறித்த போராட்டம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



