விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காவலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்
மட்டக்களப்பு பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காவலாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவருக்கு நீதி கோரியும் குறித்த நிலையத்தின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் நேற்று பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்ததுடன் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மட்டக்களப்பு பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காவலாளி ஒருவர் மதுபோதையிலிருந்தவர்களினால் வாள்வெட்டுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை கண்டிக்கும் வகையில் மட்டக்களப்பு பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் ஊழியர்கள் நேற்றைய தினம் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்ததுடன் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
வாள்வெட்டுத்தாக்குதல்
விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் நெற்செய்கை தொடர்பான ஆராய்ச்சி நடைபெறும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்தியவர்களை அங்கிருந்து செல்லுமாறு காவலாளி பணித்த நிலையிலேயே அவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு முன்பாக கரடியனாறு பொலிஸ் நிலையம் உள்ளபோதிலும் சம்பவம் நடைபெற்று இரண்டு தினங்கள் கடந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவே இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அரச தொழிலுக்கு இடையூறு விளைவிக்காதே, பாதிக்கப்பட்ட காவலாளி அனந்தசைனுக்கு நீதியைப் பெற்றுக்கொடு, கைதுசெய் கைதுசெய் குற்றவாளியை கைதுசெய் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும் என்பதுடன் நஷ்ட ஈடும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோசங்களும் எழுப்பப்பட்டன.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷார மற்றும் மட்டக்களப்பு பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பண்டார ஆகியோர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததுடன் முறைப்பாடுகளை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அப்பகுதியில் வெளிச்சம் இல்லாது இருளில் உள்ள காரணத்தினால் அங்கு நடைபெறும் விடயங்கள் தெரியவருவதில்லையெனவும் இது தொடர்பில் கடந்த காலத்தில் அறிவுறுத்தல்களை தான் வழங்கியிருந்ததாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |