அரசாங்கத்திற்கு எதிராகத் திரண்ட தொழிலாளர்கள்! கட்டுநாயக்கில் போராட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை (Protection of the State from Terrorism-PSTA) உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க பேருந்து நிலையம் அமைந்துள்ள அவரிவத்த பிரதேசத்தில் நேற்று (04) மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிப் பதவிக்கு வந்துள்ள அரசாங்கம், அந்தச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிக் கொண்டே அதற்குப் பதிலாகப் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவர முயற்சிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
பாதுகாப்புச் செயலாளருக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல், நீதிமன்ற அனுமதியின்றிக் கைது செய்தல் மற்றும் பல்வேறு அமைப்புகளைத் தடை செய்தல் போன்ற சர்ச்சைக்குரிய சரத்துகள் புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், 2027ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை முடிவடையவுள்ள நிலையில், இவ்வாறான சட்டமூலங்கள் காரணமாக அந்தச் சலுகை இழக்கப்பட்டால் ஆடைத் தொழில்துறையில் சுமார் 74 ஆயிரம் பேரின் வேலை பறிபோகும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
வர்த்தக வலய ஊழியர்களின் வேலை பறிபோகும் பட்சத்தில் தங்கள் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என்று தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுடன் பிரதேச வாசிகளும் இணைந்து கொண்டிருந்தனர்.