பண்ணையாளர்களின் பிரச்சினையை அரசியல் சாயம் பூசி மறைக்க முயற்சி - அருட்தந்தை லூக்ஜோன் குற்றச்சாட்டு
மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினையை அரசியல் சாயம் பூசி கடந்துச் செல்ல வேண்டாம் என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தினதும், மயிலத்தமடு மாதவனை மக்கள் பேரெழுச்சி போராட்டத்தினதும் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை எம். லூக் ஜோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், சிவில் சமூகங்களாக முன்னெடுக்கின்ற மனித உரிமைகள் சார்ந்த, நிலம் சார்ந்த, கால்நடைகள் சார்ந்த, விவசாயிகள் பண்ணையாளர்கள் சார்ந்த உரிமை போராட்டங்களை அரசியல் என்ற போர்வையில் மறைக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தீர்க்கப்படாத பண்ணையாளர்களின் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2ஆம் திகதி மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலம் மற்றும் பண்ணையாளர்களுடைய உரிமைகளை வேண்டி நாம் சாத்வீக ரீதியிலே ஓர் மக்கள் எழுச்சி போராட்டமொன்றை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.
ஆனால் நேற்றும் அதற்கு முந்தினமும் நாடாளுமன்றத்திலே உரையாற்றிய ஆளும் அரச தரப்பு அமைச்சர் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த போராட்டத்தை அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டது என்று சொல்லி, சிவில் சமூகமாக நாம் முன்னெடுத்த இந்த மக்கள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசியதை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மாவட்டத்திலுள்ள சிவில் சமூக அமைப்புகளாக 14 அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது மாத்திரமல்ல, கிழக்கு மாகாணம் உட்பட இலங்கை நாட்டினுடைய ஒவ்வொரு இடங்களிலும் உள்ள அனைவருக்கும் இந்த போராட்டத்திலே கலந்துகொள்ளும் படியாக நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.
14-க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகள் பங்கேற்பு
அந்த வகையிலே, இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்து அழைப்பு விடுத்த அமைப்புகளைக் குறித்த அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மறுபடியும் நாம் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.
14க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இந்த போராட்டத்துக்கான அழைப்பை விடுத்தது மாத்திரமல்ல, இந்த போராட்டத்திலும் கலந்துகொண்டன.
ஆகவே 14 அமைப்புகள் ஒரு விடயத்தைக் கையிலெடுத்து இந்த மயிலத்தமடு மாதவனை பிரச்சனை தொடர்பாக அரசுக்கு ஒரு செய்தியை சொல்வதற்காக, அந்த நிலம் விடுவிக்கப்பட வேண்டும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் கொடுக்கப்பட வேண்டும், பண்ணையாளர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று சிவில் சமூகமாக முன்னெடுத்த போராட்டத்தினை அமைச்சர் ஒருவர் தரம் குறைவாக பேசியுள்ளார்.

இதுபோன்று நடந்து கொண்டு, எங்கள் சிவில் சமூக செயல்பாட்டு அமைப்புகளை கொச்சைப்படுத்தியதை நாம் மறுபடியும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இரண்டாவதாக, இந்த போராட்டத்திலே இது ஒரு இனவாத போராட்டம் என்று முத்திரை குத்தப்பட்டது. இந்த 14 அமைப்புகள் முன்னெடுத்த இந்த போராட்டத்திலே தமிழர்கள் மாத்திரமல்ல் தமிழ் சமூகம், முஸ்லிம் சமூகம், சகோதர சிங்கள சமூகமென மூவின சமூகங்களும் சேர்ந்து ஒன்றாக அங்கே போராடின.
அவர்கள் போராடியது மாத்திரமல்ல, இந்த மூன்று சமூகத்தவரும் அவ்விடத்திலே வந்து நின்று தங்களுடைய கருத்துக்களை ஊடகங்கள் முன்னே தெரிவித்தனர்.
அஹிம்சை வழிப்போராட்டம்
ஆகவே இது இனவாத போராட்டம் அல்ல. இது இனங்களைக் கடந்து, மதங்களைக் கடந்து நிலத்துக்காகவும், கால்நடைகளுக்காகவும், பண்ணையாளரின் உரிமைக்காகவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு உரிமை போராட்டம். மூன்றாவதாக, நாம் இந்த போராட்டத்தை அகிம்சை வழியிலே சட்ட ஒழுங்குகளை கடைபிடித்து, சட்டமுறைப்படி நாளாந்த சிவில் செயற்பாடுகளுக்கு தடங்கள் ஏற்படாத வகையிலே நாங்கள் முறையாக போராடினோம்.
கச்சேரிக்குள் (மாவட்ட செயலகத்துக்குள்) உள்ளே செல்வதைக் குறித்து நாம் சிந்திக்கவும் இல்லை, அதற்கு திட்டமிடவும் இல்லை. ஆனால் நாம் சாத்வீக ரீதியிலே ஓரமாக நாம் போராடிக்கொண்டிருந்த பொழுது கச்சேரியினுடைய வாசல்கள் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டன.

இந்த போராட்டத்தை திசை திருப்புகின்ற வகையிலே நாம் கச்சேரிக்குள்ளே வருவதற்கு முனைவது போன்ற ஒரு விடயங்களைக் காட்டி, கச்சேரிக்குள்ளே செல்வதற்கு எந்தவிதமான நோக்கங்களும் இல்லாத எங்கள் முன்னால் கச்சேரி பூட்டப்பட்டு, நாங்கள் கச்சேரிக்குள்ளே வருவதற்கு முனைவதாக ஒரு படம் காட்டப்பட்டது.
அதுதான் ஒரு மிகப்பெரிய நாடகம் படம் என்று நான் இங்கே சொல்ல விரும்புகின்றேன். ஆகவே தயவுசெய்து இந்த மாவட்டத்தில் உள்ள ஆளும் அரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரையும் அமைச்சரையும் நாம் வினையமாக கேட்டுக்கொள்கின்ற விடயம் என்னவென்றால், சிவில் சமூகங்கள் முன்னெடுத்த ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தயவு செய்து அரசியல் சாயம் பூசிவிட்டு நீங்கள் கடந்து செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.