நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகை
இலங்கையில் (Sri Lanka) வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வரியற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைகளை ஆராயும் குழு, பொதுச் சேவையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள நிர்வாக தரத்தினருக்கு வழங்கப்படும் வசதிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அனுமதியை வழங்கியதாக நியாயப்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
முன்னதாக 100இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமது பாவனைக்கான வரியற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இந்தநிலையில் சபைக் குழுவின் ஒப்புதலை அடுத்து சபாநாயகர், நிதியமைச்சர் என்ற முறையில் தீர்மானத்தை நிறைவேற்ற அதிகாரம் பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவுகளின் பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி வழங்கப்படுகிறது.
இருப்பினும், 2020 பொதுத் தேர்தலில் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த பயனை பெறவில்லை.
இதேவேளை கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வாகன அனுமதிப்பத்திரங்களை விற்று தலா பல மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |