பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பேருந்துகள்
எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
குத்தகை தவணை
குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சலுகை காலம் வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19.10.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“குத்தகை நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தி தர வேண்டும். குத்தகை நிறுவனங்கள் தொடர்ந்தும் பேருந்துகளை பொறுப்பேற்க இடமளிக்க முடியாது.
எங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் பேருந்து போக்குவரத்தில் இருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும்.
இந்த போராட்டத்தில் அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சங்கம், அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம், ஐக்கிய தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்பன ஈடுபடும்.”என தெரிவித்துள்ளார்.