அபராதங்களை செலுத்த முடியாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் - நாடாளுமன்றில் தகவல்
நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த முடியாத காரணத்தினால் மாத்திரம் 1454 குற்றவாளிகள் தொடர்ந்தும் சிறைவாசம் அனுபவித்து வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருகிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (21.10.2026) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அபராதத் தொகை விபரங்கள்
சிறைவாசிகளின் அபராதத் தொகை விபரங்களையும் அமைச்சர் இதன் போது வெளியிட்டார்.
- 10,000 ரூபாய் முதல் 15,000 ருபாய் வரை: 421 கைதிகள்
- 15,000 ரூபாய் முதல் 25,000 ருபாய் வரை: 220 கைதிகள்
- 25,000 முதல் 50,000 ருபாய் வரை: 361 கைதிகள்

- 50,000 முதல் 100,000 ருபாய் வரை: 245 கைதிகள்
- 100,000 ரூபாய்க்கு க்கு மேல்: 207 கைதிகள்
தற்போது நாட்டின் சிறைகளில் மொத்தம் 10,611 குற்றவாளிகளும், 28,408 விசாரணைக் கைதிகளும் (remand prisoners) தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அபராதங்களை செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், குறிப்பிட்ட சில கைதிகளின் சார்பில் அபராதத் தொகையை செலுத்தி அவர்களை விடுவிக்க பல நிறுவனங்களும் அமைப்புகளும் ஏற்கனவே செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.