கோட்டாபயவின் பாதையிலேயே அநுர அரசாங்கமும்..! நாடாளுமன்றத்தில் மரிக்கார்
அநுர அரசு தொடர்ச்சியாக மக்கள் ஆதரவை இழந்து வருகின்றது என்றும், கோட்டாபய ராஜபக்ச சென்ற பாதையிலேயே இந்த அரசும் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(20.10.2026) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
321 கொள்கலன்கள் விடுவிப்பு
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், "மூன்றில் ஒரு பங்கினால் மின் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது 50 சதவீதத்தால் கட்டணத்தை அதிகரித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் கல்விக்கான 'வற்' வரிகளைக் குறைப்பதாகக் உறுதியளித்த போதிலும், இரு வரவு - செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வாழ விரும்பும் அழகான நாட்டை அமைப்பதாகக் கூறினார்கள். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. வரிச் சுமைகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எந்தக் கவலையும் கிடையாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் மீதான நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்ட அவர், "இந்த அரசின் ஆட்சிக் காலத்தில் சுங்கத்திலிருந்து பரிசோதிக்கப்படாமல் 321 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.
ஹேக்கர்களால் 2.5 மில்லியன் டொலர் காணாமல்போயுள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டுக்கு 18 ஆயிரத்து 368 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளது. இது மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை விடவும் பாரிய அளவிலான இழப்பாகும்.
நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை
மின்சாரம் தடைப்பட்டால் அரசே பொறுப்புக் கூற வேண்டும் என முன்னதாகக் கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் இருமுறை நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்புத் துறைமுக நகரத்திலிருந்து சீன முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். எமக்கு டொலர் தேவைப்படும் இந்த நெருக்கடியான காலத்தில் வந்த முதலீடுகளும் திரும்பிச் செல்வது பாரிய பின்னடைவாகும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து எச்சரித்த மரிக்கார் எம்.பி., "அரசு என்ன கூறினாலும் மக்கள் இதனை நிராகரித்து ஒரு வருடமாகிவிட்டது.
ஜனாதிபதிக்கு மட்டுமே இருந்த மக்கள் செல்வாக்கும் தற்போது முற்றிலும் இல்லாது போய்விட்டது. ஜனாதிபதியின் நேரடி உரைகளின் போது சமூக வலைத்தளங்களில் 'ஹா ஹா' குறியீடுகள் மழை போல் குவிந்து வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இவ்வாறுதான் நடந்தது. எனவே, இந்த அரசு நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை, மாறாகப் பேரழிவையே ஏற்படுத்தியுள்ளது. இவற்றை எதனைச் செய்தும் மூடி மறைக்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்