களுத்துறை வைத்தியசாலையில் இருந்து சிறைக்கைதி தப்பியோட்டம்
களுத்துறை சிறைச்சாலையின் கைதியொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது இன்று(08.05.2024) பகல் களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
வாத்துவை, தெல்தூவ, தேவிருகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர், ஹெரோயின் ஈபோதைப் பொருள் 2300மில்லிகிராம் தம் வசம் வைத்திருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29ம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சிறைச்சாலையில் வைத்து இன்னொரு கைதியால் தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த சந்தேக நபர், அதனையடுத்து நாகொட மருத்துவமனையில் கடந்த ஆறாம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பகல் அவர் மருத்துவமனையின் கழிவறை ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய கைதியை தேடி பொலிஸார் மற்றும் சிறைச்சாலை நிர்வாகம் என்பன கூட்டு தேடுதல் முயற்சியை முன்னெடுத்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |